எரிபொருள் விலை சூத்திரம் அத்தியவசியமானது: இலங்கை மத்திய வங்கி
அரச வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்காக எரிபொருள் விலை சூத்திரம் அத்தியவசியமானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
விலை அதிகரிப்புக்கு அமைய மற்றும் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்ற முன்னறிவிப்பு காரணமாக ஏற்படும் எரிபொருள் நெருக்கடிக்கு விலை சூத்திரம் மாத்திரம் போதுமானதாக இருக்காது எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.
அண்மைய கால பொருளதார செழிப்பு என்ற பெயரில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இலங்கை மத்திய வங்கி இதனை கூறியுள்ளது.
விலை சூத்திரத்தின் ஊடாக எரிபொருள் விலையை நிர்ணயிப்பதன் மூலம் எரிபொருள் விலைகள் குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை முன்னேற்ற முடியும்.
அத்துடன் விலை அதிகரிப்புகள் தொடர்பான செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுமடன் முன்னெடுக்க முடியும் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அதனை தவிர உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் குறையும் போது அதன் பிரதிபலனை உடனடியாக நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் எரிபொருள் விலைகள் சர்வதேச சந்தையில் ஏற்றம், இறக்கம் காணும் போது, அதனடிப்படையில் இலங்கையில் எரிபொருளின் விலைகளை நிர்ணயிப்பதற்காக கடந்த நல்லாட்சி அரசாங்கம் இதே விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியது.
எனினும் அன்றைய எதிர்க்கட்சியான தற்போதைய ஆளும் கட்சியினர் அதனை கடுமையாக விமர்சித்தனர். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும், இலங்கையில் அதன் விலை அதிகரிக்கப்படுமாயின் நாட்டில் அரசாங்கம் ஒன்று எதற்கு என விமல் வீரவங்ச உள்ளிட்ட அன்றைய எதிரணியினர் கேள்வி எழுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
