மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.அதில் எரிபொருள் தட்டுபாடும் முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது.
நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல துறைகள் பாதிப்படைகின்றன.
இந்நிலையில் இந்த பருவத்தில் நெற்செய்கைக்காக 72 மில்லியன் லீட்டர் டீசல் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருளின் தேவை
இதன்படி, நிலம் தயாரிப்பதற்கு 40 மில்லியன் லீட்டர் டீசல் மற்றும் அறுவடைக்கு 32 மில்லியன் லீட்டர் டீசல் தேவைப்படுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெல் வயல்களில் நிலத்தை தயார் செய்வதற்கு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 50 லீட்டர் டீசல், அறுவடைக்கு ஹெக்டேருக்கு 40 லீட்டர் டீசல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்பார்வை நடவடிக்கை
தற்போதும் அதிக பருவத்தில் பயிர்ச்செய்கைக்கு தேவையான எரிபொருள் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் வழங்கப்பட்டு வருகின்றதுடன், இந்த நடவடிக்கைகளின் மேற்பார்வை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், செயற்பாடுகளை ஒருங்கிணைக்க பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனமும் விவசாய அமைச்சும் தனித்தனியாக அதிகாரியொருவரை நியமித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கடற்தொழிலாளர்களின் பிரச்சினை
இதேவேளை, தமக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கடற்தொழிலாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் தங்களுக்கும் அதே சலுகை வழங்கப்பட வேண்டுமென கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, படகுகளின் விலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் தாம் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.