கொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியு.ஆர் குறியீடு திட்டம் சோதனை
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டத்தின் முன்னோடி திட்டம் இன்று (21) கொழும்பில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள 6 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடு அடிப்படையிலான முறைமை சோதனை செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடியை குறைக்கும் முயற்சியில், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் (ICTA) இணைந்து வெளியிட்ட இணையத்தளம், நான்கு நாட்களில் 3 மில்லியன் பதிவுகளை தாண்டியுள்ளது.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் இது குறித்து தெரிவித்ததாவது,
"உத்தியோகபூர்வ மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டை இணையத்தளத்தில் ஏறத்தாழ 3 மில்லியன் மக்கள் பதிவு செய்து QR குறியீடுகளைப் பெற்றுள்ளனர்.
பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்
மேலும், தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முயற்சிக்கும் அங்கீகரிக்கப்படாத தளங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தேசிய அடையாள அட்டை, வாகன உரிம எண், வாகன எண் (Vehicle Chassis number) மற்றும் விவரங்கள் சரி பார்க்கப்பட்ட QR குறியீடும் மக்களுக்கு விநியோகிக்கப்படும். QR குறியீடு மற்றும் வாகன இலக்க தகட்டின் இறுதி இரு இலக்கங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு கிழமையில் இரு நாட்கள் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்," என குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
இதனை தொடர்ந்து, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகத்தை இன்று (21) ஆரம்பித்துள்ளது.

அதன்படி, ஜூலை 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை QR அமைப்பின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படாது. தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட QR குறியீடு ஜூலை 25 ஆம் திகதிக்கு பிறகே செயல்படும்.
வாகன இலக்கத்தகட்டின் படி எரிபொருள் வழங்கப்படும் ஒழுங்குமுறை
செவ்வாய் மற்றும் சனி : 0,1,2
வியாழன் மற்றும் ஞாயிறு : 3, 4, 5
திங்கள், புதன் மற்றும் வெள்ளி : 6,7,8,9
எரிபொருள் விநியோக கட்டுப்பாடுகள்
மோட்டார் சைக்கிள்கள்: ரூ. 1500
மூன்று சக்கர வாகனங்கள்: ரூ. 2000
மற்ற வாகனங்கள்: ரூ. 7000

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் படி இலங்கையில் 7.5 மில்லியன் வாகனங்கள் இயங்குகிறது. இதில் 4.2 மில்லியன் மோட்டார் சைக்கிள்கள், 1.1 மில்லியன் முச்சக்கர வண்டிகள் மற்றும் 877, 341 கார்கள் உள்ளடங்குகின்றன.