உயிருக்கு போராடும் போது எரிபொருள் நிதியை காரணம் காட்ட முடியாது - ஆளுநர் விசனம்
மக்கள் உயிருக்குப் போராடும் இடர் வேளையில் எரிபொருள் மற்றும் நிதியை காரணம் காட்டி பணிகளை தாமதப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றும், சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் ஊடாக சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை ஒருபோதும் சட்டபூர்வமாக்கிவிட முடியாது என்றும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள் மற்றும் தவிசாளர்களுக்கான விசேட செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) கைதடியிலுள்ள உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே, முதன்மை அதிதியாக கலந்துகொண்ட ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தவிசாளர்களுக்கு பாராட்டு
பேரிடர் காலங்களில் மக்களின் துயர்துடைக்க இரவு பகலாக உழைத்த பல தவிசாளர்களை நான் பாராட்டுகின்ற அதேவேளை, சில கசப்பான உண்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
பேரிடர் வேளையில் சில சபைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் என்னிடம் கவலையோடு முறையிட்டனர்.

மக்கள் உயிருக்குப் போராடும்போது, 'எரிபொருள் தந்தால் தான் இயந்திரங்களை இயக்குவோம்', 'பணம் ஒதுக்கினால் தான் வேலை செய்வோம்' என நிபந்தனை விதித்துக்கொண்டு நிர்வாக சிக்கல்களை காரணம் காட்டியதை மன்னிக்க முடியாது.
மாகாண நிர்வாகம் நிதியை வழங்க தயாராக இருக்கும்போதும், பிரதேச செயலகங்களில் நிதியைக்கோரி காலத்தை வீணடித்தமை தவறான முன்னுதாரணமாகும். இன்றைய ஊடகங்களில் வெளியான செய்தி வேதனையளிக்கின்றது.
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் வீடொன்றின் மீது மரம் வீழ்ந்த நிலையில், அதனை அகற்ற ஆளணி இல்லை என கைவிரித்ததாகவும், இறுதியில் சபை உறுப்பினர்களே அதனை அகற்றியதாகவும் அறியமுடிகிறது. இது மிகவும் வெட்கக்கேடான விடயமாகும். ஆபத்து வேளையில் இவ்வாறு பொறுப்பற்ற ரீதியில் அதிகாரிகள் நடந்துகொள்வதை ஏற்க முடியாது.
சட்ட ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்படுமாறு
சட்ட ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்படுமாறு அதிகாரிகளை வற்புறுத்துவதும், அவர்கள் மறுக்கும் பட்சத்தில் சபையில் தீர்மானம் நிறைவேற்றி அதனைச்செய்ய முற்படுவதும் தவறான நடைமுறையாகும்.
சட்டத்துக்கு முரணான ஒரு விடயத்தை, சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் சட்டபூர்வமாக்கிவிட முடியாது என்பதை தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதிகாரிகள் சட்டத்தை சுட்டிக்காட்டுவது உங்களை கட்டுப்படுத்த அல்ல, மாறாக உங்களை சரியான பாதையில் வழிப்படுத்தவே என்பதை உணர வேண்டும். சில சபைகளில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தகவல்கள் தவிசாளரின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சட்ட முரணான தீர்மானங்கள்
இது அச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாகும். நாம் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் பட்சத்தில் தகவல்களை வழங்கப்பயப்பட தேவையில்லை. இவ்வாறான சட்ட முரணான தீர்மானங்களை அனுமதிக்க முடியாது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன் குறிப்பிடுகையில், சட்டவிரோத கட்டடங்களை இடிக்கும் அதிகாரம் ஆளுநருக்கோ ஆணையாளருக்கோ இல்லை. கட்டட அனுமதியை வழங்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கே அதனை அகற்றும் அதிகாரமும் உள்ளது. நாங்கள் சட்ட ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்.
அதேபோல, அதிகாரிகளுடன் முரண்பட்டுக்கொண்டு அவர்களை இடமாற்றம் செய்யக் கோருவது 'சங்கீதக் கதிரை' விளையாட்டைப் போன்றது. இருக்கும் ஆளணியைக் கொண்டு, அனுசரித்து வேலை வாங்கும் ஆளுமை தவிசாளர்களுக்கு இருக்க வேண்டும், என்றார்.
தேசிய கணக்காய்வு நடைமுறைகள், பெறுகை நடைமுறைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆகிய தலைப்புகளில் விரிவான அமர்வுகளாக நடைபெற்ற இச்செயலமர்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.








எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan