எரிபொருள் விநியோகம் செய்வதில் இன்று முதல் புதிய நடைமுறை
முன்பதிவுகளுக்கு அமைய, கொடுப்பனவு செலுத்தப்பட்ட பின்னர் மாத்திரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்லும் புதிய முறைமை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அகில இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள காசோலை வசதி உடனடியாக நிறுத்தப்பட்டு, பணம் செலுத்தப்பட்ட பின்னர் எரிபொருளை விநியோகிக்கும் முறைமையே நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஒரே தடவையில் பணம் செலுத்தும் முறை கைவிடப்பட்டது
இதற்கமைய, எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், காசோலை மூலம் ஒரே தடவையில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்திற்கு பணத்தை செலுத்தும் முறைமை கைவிடப்பட்டுள்ளது.
அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைப்பது மேலும் வரையறைக்கு உள்ளாகும் எந்தெந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது என்பது தொடர்பான தகவல்கள், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும். எனவே, ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் வரிசைகளில் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.