பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் கியூபாவில் எரிபொருள் விநியோகம் - கறுப்புச் சந்தை வியாபாரம் தீவிரம்
அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், கியூபாவின் கறுப்புச் சந்தை மற்றும் தனியார் துறைகளில் அமெரிக்க எரிபொருளின் பயன்பாடு திடீரென அதிகரித்து வருகின்றது.
ஆறு தசாப்த கால ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பின்னர், அந்நாட்டின் கம்யூனிசக் கொள்கை சார்ந்த ஆற்றல் துறையில் முதலாளித்துவ அமைப்பின் தாக்கங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் தட்டுபாடு
வெனிசுலா மற்றும் மெக்சிகோ போன்ற பாரம்பரிய நாடுகளிலிருந்து கியூபாவிற்கு கிடைத்து வந்த எண்ணெய் விநியோகம் முடங்கியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சுகாதாரம், பொதுப்போக்குவரத்து மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, அமெரிக்க வணிகத் திணைக்களத்தின் சிறப்புத் தளர்வு ஒன்றின் கீழ், கியூபாவின் தனியார் வணிகங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் எரிபொருளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதன் மூலம், கடந்த பெப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 900,000 பீப்பாய் அமெரிக்க எரிபொருள் கியூபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் நாட்டின் மொத்தத் தேவையில் சில நாட்களுக்கு மாத்திரமே போதுமானது என்ற போதிலும், அது கியூபாவின் பொருளாதார நடைமுறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
கறுப்புச் சந்தை வியாபாரம் தீவிரம்
தனியார் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் வாடகை வாகன உரிமையாளர்கள் இந்த எரிபொருளைப் பயன்படுத்தி தமது சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, முறையான விநியோகக் கட்டமைப்பு இன்மையால் அங்கு கறுப்புச் சந்தை வியாபாரமும் தீவிரமடைந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் ரகசியக் கிடங்குகள் மூலம் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதால், குறைந்த வருமானம் பெறும் சாதாரண பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, கியூபா அரசாங்கம் ஆற்றல் துறையில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பகுதியளவில் அனுமதி அளிக்கும் வகையில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், இது நாட்டின் தேசிய சொத்துக்களைப் பெருமளவில் தனியார் மயமாக்கும் முயற்சி அல்ல என அந்நாட்டு ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், கட்டுப்பாடுகள் நிறைந்த போதிலும் கியூபாவில் தனியார் துறையினரால் அமெரிக்க எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதும், அது அங்குள்ள சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களும் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri