முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை எரிபொருள்
இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவிற்கு 3,250,000 ரூபாய் பெறுமதியான எரிபொருள் கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது 01.01.2023 முதல் 07.10.2024 வரை வழங்கப்பட்ட எரிபொருள் கூப்பன் பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் உரிமை சட்டத்திற்கமைய, மாதாந்தம் 1200 லீட்டர் டீசல் மற்றும் 750 லீட்டர் பெட்ரோல் பெறுவதற்கு உரிமை உண்டு.
எரிபொருள் கூப்பன்
மாதத்தின், முதல் நாளில் எரிபொருளின் சந்தை மதிப்பின் அடிப்படையில் அதிகபட்ச மதிப்பை மீறாத வகையில் சம்பந்தப்பட்ட காலத்தில் எரிபொருள் கூப்பன்கள் வழங்கப்படும்.
அதற்கமைய, கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் தற்போது வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவிக்கு வழங்கப்பட்ட எரிபொருள் கூப்பன்களின் பெறுமதி 3,250,000 ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அரச சலுகைகள்
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மற்றும் அவரது குடும்பங்களுக்கு வழங்கும் சலுகைகளை குறைக்கவுள்ளதாக சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.