சர்ச்சைக்குரிய பௌத்த தேரர் பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் உறவினரா!
தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரருடன் தனக்கு ஏதேனும் உறவுமுறை இருக்கிறதா என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என முன்நிலை சோசலிசக் கட்சி கோரியுள்ளது.
கட்சியின் பொதுமக்கள் விவகாரங்களுக்கான செயலாளர் துமிந்த நாகமுவ இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நபர்கள், தங்களிடம் உள்ள அரசியல், மத மற்றும் அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் மோசமானதொரு போக்கு தற்போதைய ஆட்சியிலும் காணப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறான உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது அதிகார பலத்தைக்கொண்டே தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஒருபுறம் தங்களது துறவறத்தையும், மறுபுறம் அட்டமஸ்தானத்திற்குரிய அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்கள் தங்களது உறவுமுறைப் பலத்தைப் பயன்படுத்த முனைகின்றனர் என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன போன்ற நபர்களுடன் ஏதேனும் தொடர்பு அல்லது உறவுமுறை இருக்குமாயின், அந்தப் பலத்தையும் தற்போதைய அரசாங்கத்துடனான உறவுகளையும் இக்குற்றவாளிகள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் குறித்த தேரருக்கும் இடையில் காணப்பட்ட நெருங்கிய தொடர்பை நாகமுவ கடுமையாக விமர்சித்துள்ளார்.
"கை கோர்த்துக்கொண்டு பூந்தோட்டங்களில் உலாவுவது போல் விகாரைகளைச் சுற்றித் திரிந்த" கடந்த காலத்தை நினைவுகூர்ந்த அவர், இன்று அந்த நெருக்கத்தின் அவலம் ஜனாதிபதிக்கும் புரிந்திருக்கலாம் எனவும், ஆனால் இப்போது தவறு நடந்து முடிந்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலைமைகளைத் தவிர்ப்பதற்காகவே அரசியலும் மத நிறுவனங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட வேண்டும் என்பதை தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசும் மதமும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அரசியல்வாதிகள் இவ்வாறு சென்று மதத் தலைவர்களுடன் கைகோர்க்கும்போது, அந்த கைகளால் செய்யப்படும் தவறுகளும் அழுக்குகளும் அரசியலிலும் ஒட்டிக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேரர் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேர்தல் பிரச்சாரப் பாடல் ஒன்றைக் கூட எழுதியுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு பாடல்களை எழுதி, கைகோர்த்து உருவாக்கிய தொடர்பின் வெளிப்பாடுதான் இப்போது காவல்துறை தலையீடுகள் மற்றும் நீதிமன்ற செயல்பாடுகளுக்குள் நமக்குத் தெரிகிறது.எனவே, அரசாங்கத்தால் இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
முழு அரசாங்கமும் பல்லேகம ஹேமரதன தேரருடன் தங்களுக்கு இருக்கும் உண்மையான தொடர்பு என்ன என்பதை நாட்டுக்கு விளக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் மக்களுக்குப் வாக்குறுதியளித்த அரசியல் கலாசார மாற்றமும், சமூகத்திற்கு வழங்குவதாகக் கூறிய புதிய முன்மாதிரியும் இதுதானா என ஒட்டுமொத்த சமூகத்தின் சார்பாக நாங்கள் பலமாகக் கேள்வி எழுப்புகிறோம் என துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.