சமூக ஊடக பாவனைக்கு தடை : பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
பிரான்சில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகளில் மாணவர்கள் கைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் இந்த மசோதா தடை விதிக்கிறது.
புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குள்
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே சிறுவர்களுக்குச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கும் முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.

டிஜிட்டல் தளங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகள் உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முக்கியத் திட்டமாக இதை முன்னெடுத்த ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன், நாடாளுமன்றத்தின் இந்த முடிவை ஒரு "முக்கிய முன்னேற்றம்" எனப் பாராட்டியுள்ளார்.
ஒன்லைனில் குழந்தைகளையும் வளரிளம் பருவத்தினரையும் பாதுகாப்பதில் ஐரோப்பாவிற்கே பிரான்ஸ் முன்னோடியாகத் திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவிருக்கும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குள், அதாவது செப்டெம்பர் மாதத்திற்குள் இத்தடையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், இது பிரான்ஸ் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை அந்நாட்டின் அரசியலமைப்பு பேரவை ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னரே முழுமையாக நடைமுறைக்கு வரும்.
கணக்குகள் முடக்கப்படும் நிலை
புதிய சட்டவிதிகளின்படி, இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
முதல் கட்டமாக, வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் புதிதாக எந்தவொரு சமூக வலைத்தளக் கணக்கையும் தொடங்க முடியாது.
இரண்டாம் கட்டமாக, ஜனவரி 2027 முதல் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் அவர்களின் கணக்குகள் அனைத்தும் முழுமையாக முடக்கப்படும் என டிஜிட்டல் துறை அமைச்சர் ஆன் லே ஹெனாஃப் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கல்வி, அறிவியல் மற்றும் கலைக்களஞ்சியம் சார்ந்த இணையதளங்களைப் பயன்படுத்த இதில் எந்தத் தடையும் இருக்காது. எதிர்ப்புகளும் ஆதரவுகளும் இடதுசாரி எதிர்க்கட்சியான 'பிரான்ஸ் அன்போவ்ட்' கட்சி இந்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இணையத்தில் பெயர் வெளியிடாமல் இருக்கும் உரிமையை இது பறிப்பதாகவும், நடைமுறையில் இத்தடையை முழுமையாகச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
அதேவேளையில், குழந்தைகள் நல ஆர்வலர்களும் பெற்றோர்களும் இந்த முடிவைப் பெருமளவில் வரவேற்றுள்ளனர். சமூக வலைத்தளங்களால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள், இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து தங்களது பிள்ளைகளைப் பாதுகாக்க இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.