பிரான்ஸ் கடற்படையினரின் அதிரடி: ஆங்கிலக் கால்வாயில் தீப்பற்றி எரிந்த படகு- 157 அகதிகள் மீட்பு
பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக் கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து உடனடியாகச் செயல்பட்ட பிரான்ஸ் கடற்கரை காவல்படை, மூன்று மீட்புக் கப்பல்களை அனுப்பி படகில் இருந்த 157 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளது.
சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள்
அண்மைக்காலமாக ஆபத்தான இந்த கடல் வழியைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள் தகுதியற்ற சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமான மக்களை ஏற்றிச் செல்வதால் இத்தகைய கொடூர விபத்துகள் தொடர்ந்து நிகழ்கின்றன. கடந்த வாரம் கூட இதேபோன்று சிறிய படகில் கால்வாயைக் கடக்க முயன்ற மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள பிரித்தானிய அரசு செய்தித் தொடர்பாளர், "இந்த சம்பவம் சிறிய படகுகள் மூலம் கடல் கடப்பதில் உள்ள பயங்கர ஆபத்தை உணர்த்துகிறது. இத்தகைய ஆபத்தான பயணங்களைத் தடுக்க பிரான்ஸ் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
2015-16 காலகட்டத்தில் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடிக்குப் பிறகு ஐரோப்பாவில் குடியேற்றம் மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.