போலி இயக்குனர் புனைப்பெயரில் பெண்களின் புகைப்படங்களை பெற்று மோசடி!
திரைப்பட இயக்குனர் சோமரத்ன திசாநாயக்க என்ற புனைப்பெயரில் தன்னைக் காட்டிக் கொண்டு, பெண்களின் ஆடைகள் அணியாத புகைப்படங்களை பெற்ற சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நேற்று (07) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க சந்தேக நபரை ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
திரைப்பட தயாரிப்புகளில் நடிக்க வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து பெண்களின் ஆடைகள் அணியாத புகைப்படங்களைப் பெற்றதாகக் குறித்த சந்தேகநபர் மீது மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்ட நபர் பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய தபால் ஊழியர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், திரைப்பட இயக்குனர் சோமரத்ன திசாநாயக்க குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப்பிரிவில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
தனது அடையாளம் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் போலியான பேஸ்புக் கணக்கை நடத்தி வருவதாகவும், இதனால் பெண்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இளம் பெண்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்ததாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்த விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணைகளில் இருந்து, சோமரத்ன திசாநாயக்க தான் இயக்கும் புதிய படங்களுக்கு நடிகைகளாக வேடமிட்டு, அவற்றின் புகைப்படங்களை கோரியிருப்பது தெரியவந்துள்ளது.
இதன்படி பொல்கஹவெலவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், முன்வைக்கப்பட்ட உண்மைகளையும் விசாரணைகளின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



