பிரபல வர்த்தக நிலைய காட்சியறைகளில் பாதணிகள் மோசடி விற்பனை
இலங்கையின் பிரபல ஆடை மற்றும் நவநாகரிக வர்த்தக நிலைய தொடர் ஒன்றின் காட்சியறைகளில் வெளிநாட்டு தயாரிப்பு பாதணிகள் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வர்த்தக நிலையத் தொடரின் காட்சியறை ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட பாதணிகளுக்கான பற்றுச்சீட்டுகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான தொடர் விசாரணையின் பின்னர், 2026 செப்டெம்பர் 11 அன்று தெஹிவளை, கவுடான பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த பாதணி தயாரிப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.
சீன எழுத்துக்கள் மற்றும் “Made in China” என்ற அடையாளத்துடன் கூடிய பெட்டியில் பாதணிகள் வைக்கப்பட்டிருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கும் பாதணிகள் இறக்குமதி செய்யப்பட்டவை என நுகர்வோர் நம்பக்கூடிய நிலையில் பொதிசெய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தன.
பாதணிகளுக்கு பொருந்தும் இறக்குமதி வரி
எனினும் விசாரணையில் வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், முடிவுற்ற பாதணிகளுக்கு பொருந்தும் இறக்குமதி வரிகளைத் தவிர்க்கும் நோக்கில், பாதணிகளின் அடிப்பகுதிகள் மற்றும் ஏனைய பாகங்கள் மூலப்பொருட்களாக வகைப்படுத்தப்பட்டு தனித்தனியாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர் அவை தெஹிவளை, கவுடான பகுதியில் உள்ள இரகசிய இடமொன்றில் ஒன்றிணைக்கப்பட்டு ஒட்டப்பட்டு முழுமையான பாதணிகளாக தயாரிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட பாதணிகளில் உண்மையான உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்படாமல் “Made in China” என அடையாளமிடப்பட்டு, பிரபல வர்த்தக நிலையத் தொடர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகள் பொருளின் உண்மையான உற்பத்தி மூலத்தைப் பற்றி நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும்.
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மேலும் பாதணிகளில் குறைபாடு ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பான உண்மையான உற்பத்தியாளரை அடையாளம் காண்பதும் சிரமமாகலாம்.

அதேவேளை, சட்டபூர்வமாக வரிகளைச் செலுத்தி நியாயமான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும் இது நியாயமற்ற வர்த்தகப் போட்டியை ஏற்படுத்தக்கூடும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பின்போது சுமார் 1,000 ஜோடி பாதணிகள் மற்றும் அவற்றை தயாரிக்க/ஒன்றிணைக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.