பாடசாலை மாணவர்களை அனுமதிப்பதில் மோசடி: ஜோசப் ஸ்டாலின் பகிரங்கம்
கடந்த அக்டோபர் மாதம் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கல்வி அமைச்சு 2,367 சிறுவர்களை பிரபல பாடசாலைகளில் 3 வருடங்களாக முறையான முறைகளுக்கு அப்பால் அனுமதித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (26.11.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
2020 ஜனவரி 1 முதல் 2022 மே 31 வரையிலான காலப்பகுதியில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தணிக்கை அறிக்கை மூலம் முறையான செயற்பாட்டுக்கு அப்பாற்பட்டு சிறுவர்களை அனுமதிப்பதற்காக 3,308 கடிதங்களை கல்விச் செயலாளர் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.
வாய்ப்பை இழந்துள்ள மாணவர்கள்
அதில் 72 சதவீத கடிதங்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வகுப்புக்கு கொழும்பு விசாகா கல்லூரிக்கு 41 கடிதங்களும், கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு 48 கடிதங்களும், கொழும்பு நாலந்தா கல்லூரிக்கு 38 கடிதங்களும், கொழும்பு சிறிமாவோ மகளிர் கல்லூரிக்கு 33 கடிதங்களும், குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரிக்கு 48 கடிதங்களும், கண்டி தர்மராஜ வித்தியாலயத்திற்கு 29 கடிதங்களும், கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரிக்கு 30 கடிதங்களும், கண்டி கிங்ஸ்வூட் கல்லூரிக்கு 15 கடிதங்களும், கண்டி உயர் பெண்கள் கல்லூரிக்கு 31 கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் 6ஆம் வகுப்புக்கான வாய்ப்பை இழந்துள்ளனர் என கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், கடிதங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டதோடு அதில் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலைகளுக்கு அதிகமாக அனுப்பப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |