நெருக்கடி நிலைமையை அமுல்ப்படுத்த தயாராகும் பிரான்ஸ்
பிரான்ஸில் வைத்தியசாலைகள் உட்பட சுகாதார பிரிவுகளில் நெருக்கடி நிலைமையை அமுல்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் ஒலிவியர் வெரோன் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பரவிய மரபணு மாறிய கொரோனா தொற்று பிரான்ஸில் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக இந்த நெருக்கடி நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் பிரான்ஸில் தேசிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டது. தற்போது முடக்கல் நிலைமைக்கு செல்லாமல் இந்த நடவடிக்கைகளை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கமைய இடவசதிகள் உள்ள வைத்தியசாலைகள் அனைத்தினதும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், தற்போதைய நிலையில் அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை பிற்போடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கு அவசியமான தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி நிலையினை பிரான்ஸின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் செயற்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுல்ப்படுத்த வேண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா தொற்றின் நிலைமை மேலும் தீவிரமடைந்தால் நாடு முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்களை அணி திரட்டுவதே இந்த நடைமுறையில் முக்கிய நோக்கமாகும்.
பிரான்ஸில் தற்போது நாளாந்தம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதனால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.