சமூக வலைதளங்கள் தொடர்பில் பிரான்ஸ் அரசின் அதிரடிச் சட்டம்!
சமூக வலைதளங்களின் பிடியில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்பதற்காக பிரான்ஸ் அரசு அதிரடிச் சட்டமொன்றை கையில் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து, 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைதளங்களை முற்றாகத் தடை செய்யும் உலகளாவிய நகர்வில் பிரான்ஸ் தற்போது முன்னிலை வகிக்கிறது.
அதிரடிச் சட்டம்
"எமது பிள்ளைகளின் மனநலனை, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடியாது" எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், இந்தத் தடையை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.

இதன்படி, ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற தளங்களுக்கு சிறுவர்கள் நுழைவது சட்டரீதியாகத் தடுக்கப்படும். ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்படும் அபாயகரமான வலைதளங்கள் சிறுவர்களுக்கு முற்றாகத் தடை செய்யப்படும்.
பாதிப்பு குறைந்த ஏனைய தளங்களை அணுக வேண்டுமாயின், பெற்றோரின் நேரடி அங்கீகாரம் கட்டாயமாக்கப்படும்.
பிரான்ஸ் அரசின் நகர்வு
ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கையடக்கத் தொலைபேசித் தடை, இனி உயர்தர பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

சமூக வலைதளங்களால் ஏற்படும் மன உளைச்சல், தூக்கமின்மை மற்றும் உளவியல் சிக்கல்கள் காரணமாக, ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், கிரீஸ், ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகியவையும் இதேபோன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவரத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
பிரான்ஸ் அரசின் இந்த நகர்வு, தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து அடுத்த தலைமுறையைப் பாதுகாப்பதற்கான ஒரு 'டிஜிட்டல் பாதுகாப்புச் சுவர்' என சர்வதேச சமூகத்தினால் உற்றுநோக்கப்படுகிறது.