அவுஸ்திரேலியாவில் தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் பலி!
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெல்பன் Dandenong பிரதேச வீடொன்றில் இந்த சம்பவம் நேற்று 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் ரித்திஷ் கிருஷ்ணநீதன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் Gas heater மூலம் ஏற்பட்ட தீ, பற்றி எரிந்து வேகமாக வீட்டின் ஏனைய இடங்களுக்கும் பரவியிருக்கிறது. ரித்திஷ் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் போகமுடியாதளவுக்கு வீட்டினை தீ சூழ்ந்து எரிந்திருக்கிறது.
ரித்திஷின் தாயார் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மகனை காப்பாற்றுவதற்கு முயற்சிசெய்துள்ளார். அவரது கைகளில் படுகாயமேற்பட்டபோதும் மகனைக்காப்பாற்ற முடியவில்லை.
இந்த சமயத்தில், அவர்களது அயலவர் ஒருவரும், அந்த வீட்டில் தங்கியிருந்த குடும்ப நண்பரும் இணைந்துஅறையை உடைத்துக்கொண்டு உள்ளே போய் ரித்திஷை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்கள்.
ஆனால், அதற்கிடையில் ரித்திஷ் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்றபோது ரித்திஷின் தகப்பனார் வீட்டிலிருந்து பத்துநிமிட தூரத்தில் வந்துகொண்டிருந்திருக்கிறார். ஆனால், அவர் வருவதற்குள் மகன் இறந்துவிட்டார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினரும் அயலவர்களும் சேர்ந்து பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை ஒருவாறு அணைத்து முடித்தார்கள். ரித்திஷின் சகோதரனும் சகோதரியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ரித்திஷ் குடும்பம் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.
Gas heater-இலிருந்து ஏற்பட்ட தீ விபத்து இது என்று தெரிவித்துள்ள பொலீஸார், இதற்கு சந்தேகத்துக்கிடமான வேறு காரணங்கள் எதுவும் கிடையாது என்று கூறியுள்ளனர்.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        