கொழும்பில் மாறுவேடத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்: பொலிஸார் வெளியிட்ட காரணம்
கொழும்பு - ஜிந்துபிட்டியில் நேற்றுமுன் தினம் (16) நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜிந்துபிட்டி பகுதியில் நேற்றுமுன் தினம் (16) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 44 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் அவரது 4 வயது மகன் மற்றும் அவரது சகோதரியின் 3 வயது மகள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
வெளியான காரணம்
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பழனி ரிமோஷன் மற்றும் புகுடு கண்ணா ஆகியோருக்கும் இடையேயான நீண்டகால மோதலின் விளைவாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 44 வயதான ஹசன் நாசர் என்ற கெனிஸ்டர் என்பவர் புகுடு கண்ணாவின் நெருங்கிய கூட்டாளி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
புகுடு கண்ணாவின் போட்டியாளரான பழனி ரிமோஷனுடன் ஏற்பட்ட தகராறின் போது, உயிரிழந்த கெனிஸ்டரின் மனைவி அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தகராறின் விளைவாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் முச்சக்கர வண்டி ஓட்டுநர் மற்றும் கடன் வழங்குபவர் என்றும், அவர் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இரகசியமாக பணம் வசூலித்து வந்ததாகவும், ஆனால் அவர் எந்த குற்றவியல் குற்றச்சாட்டுகளிலும் கைது செய்யப்படவில்லை என்றும் மூத்த பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
திருமணமான தம்பதிகள் போல் மாறுவேடம்
மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொள்ள முச்சக்கர வண்டியில் வந்த இரு சந்தேகநபர்களில் ஒருவர் பெண் வேடத்தில் பர்தா போன்ற உடை அணிந்திருந்திருந்ததாகவும், மற்றொருவர் முகமூடி அணிந்திருந்தமையும் சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

இவர்கள் திருமணமான தம்பதிகள் போல் மாறுவேடத்தில் வந்துள்ளமையும்,முகமூடி அணிந்த நபர் பிஸ்டல் வகை துப்பாக்கியை எடுத்துச்சென்றமையும் தெரியவந்துள்ளது.
மேலும் கொலை செய்யப்பட்ட நபர் கடைசியாக புகுடு கண்ணா பிரிவில் பணியாற்றியதாகவும், கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் உறவினர் ஒருவரும் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.