மூன்று விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட நால்வர் சாவு
மூன்று இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண்கள் இருவர் உட்பட நால்வர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
வெலிமடை – ஊவாபரணகம பகுதியில் கப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதில் ஆண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில், கப் ரக வாகன சாரதியும், அதில் பயணித்த மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஹக்கலை மற்றும் கலஹகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 36 வயதுகளையுடையவர்கள்.
இதேவேளை, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி – கொழும்பு வீதி, அம்பலாங்கொடை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில், பாதசாரி ஒருவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது லொறி ஒன்றுடன் மோதுண்டு பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து – காலி நோக்கிப் பயணித்த லொறியே குறித்த பெண்ணை மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதனிடையே, களுத்துறை தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்வத்தை பிரதேசத்தில், மத்துகமவிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி பெண் ஒருவர் மீது மோதியதில் குறித்த பெண் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் பெயர், வயது விவரங்கள் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.
பிரேதப் பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.