கிழக்கு கடலில் காணாமல்போன நான்கு கடற்தொழிலாளர்களும் மீட்பு(Video)
கடந்த இரண்டு வாரங்களாக, மீன்பிடிக்கச் சென்று திசைமாறி காணாமல்போனதாகக் கூறப்பட்ட 4 கடற்தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்துள்ளார்.
ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற கடற்தொழிலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
காணாமல்போன கடற்தொழிலாளர்கள்
மேலும் தெரிவிக்கையில்,“கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம், கல்முனையில் இருந்து கடந்த செப்டெம்பர்
மாதம் 26 ஆம் திகதி ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் 15 நாட்கள்
கடந்தும் வீடு திரும்பாமல் இருந்த 4 கடற்தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல்போன கடற்தொழிலாளர்கள் அனைவரும் தற்போது மீட்கப்பட்டு சொந்த இடத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26.09.2022 அன்று மாலை புறப்பட்டுச் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் குறித்து நேற்று வரை எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது.
ஊடகங்களில் வெளியான செய்தி
இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
கல்முனையைச் சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி. கபீர் (வயது 50), எம்.என். ஹில்மி (வயது 33) ஆகிய கடற்தொழிலாளர்களே படகில் பயணம் செய்து காணாமல்போய் இருந்தனர்.
அவர்கள் சென்ற படகின் ஜிபிஸ் தொழிநுட்பக் கருவி பழுதடைந்தமையால் திசை மாறி பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திசை மாறி தத்தளித்த படகை கடற்தொழிலாளர் ஒருவர் கண்டு கடற்படையினருக்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய மீட்பு நடவடிக்கை உள்ளூர் கடற்தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் கரைக்குக் காணாமல் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் உள்ளிட்ட படகு வாழைச்சேனை துறைமுகத்துக்கு இன்று இழுத்து வரப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் வீடுகளுக்குச் செல்லவுள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது கடற்படை மீன்பிடித் திணைக்களத்தினர், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் படகுகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.”என கூறியுள்ளார்.



