விமான நிலையத்தில் சிக்கிய மில்லியன் கணக்கான போதைப்பொருள்! நால்வர் அதிரடியாக கைது
200 மில்லியன் ரூபாய் மதிப்புடைய 20.7 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (29) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்
இவ்வாறு கைதானவர்களில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தாய்லாந்தின் பெங்கொங்கிலிருந்து போதைப்பொருளை வாங்கி, இந்தியாவின் மும்பைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து இன்று காலை 07.50 மணிக்கு இண்டிகோ விமானம் 6.E.- 1185 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட பெண்கள் பொரளை மற்றும் ஒருகொடவத்தையைச் சேர்ந்தவர்கள் எனவும், கைதான ஆண்கள், தெமட்டகொட மற்றும் ஒருகொடவத்தையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் தங்களது பையில் 20 பொதிகளில் 20 கிலோகிராம் 684 கிராம் "குஷ்" போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.