நல்லூர் பிரதேச சபையில் விசேட விலைக் கழிப்பு கொள்கை உருவாக்கம்
நல்லூர் பிரதேசத்தில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு சோலைவரி அறவீட்டில் கொள்கை அடிப்படையில் விலைக்கழிவு கொடுப்பதற்கு நல்லூர் பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்நிலையில் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளின் நிலத்தின் பெறுமானம் புதிதாக அளவீடு செய்யப்பட்டுள்ளமையால் அதற்கேற்ப வருமான வரி அறவீட்டிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன்,வறிய மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
அதனடிப்படையில் இது தொடர்பில் முதலில் கொள்கை உருவாக்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பொறிமுறையை தவிசாளர் சபையில் பிரஸ்தாபித்திருந்தார்.
அதனடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு சோலைவரி அறவீட்டில் விலைக்கழிப்பு அல்லது பரிகாரம் கொடுப்பது சிறந்தது எனவும்,விலைக்கழிப்பு செய்வதால் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதாரத்தில் பின்நிலையில் உள்ள மக்களது நலன்கள் பாதுகாக்கப்படும் சந்தர்பம் வலுவாக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் பிரதேசத்தினை அடிப்படையாக கொண்டு நிலத்தின் பொறுமதி மற்றும் இதர காரணிகளை கொண்டு வரி நிர்ணயிக்கப்படுகின்றது.
அந்தவகையில் விலைக் கழிப்புக்கு முன்னர் அது தொடர்பில் ஆராய்ந்து வறிய மக்களது தரவுகளை துல்லியமான ஆராய்ந்து கிராம உத்தியோகத்தரது உறுதிப்படுத்தலுடன் இதை மேற்கொள்ள வேண்டும் எனவும் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.






