மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் சபாநாயகரின் அறிவுரை
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும்,
“ஐரோப்பிய ஒன்றியத்தால் நாட்டுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு எவ்வித அரசியல் வேறுபாடுகளுமின்றி சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பொதுக்கலந்துரையாடல்
இந்த வரிச்சலுகை வழங்கல் குறித்த மீளாய்வுக்காக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஆகிய விடயங்களில் அரசு நம்பத்தகுந்த முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டமானது தவறான முறையில் பிரயோகிக்கப்படுவதாகவும், அதனூடாக அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்து வருகின்றது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இந்த விடயம் தொடர்பில் பரந்துபட்டதும், சகலரையும் உள்ளடக்கியதுமான பொதுக்கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று 2024 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நிகழ்நிலைக்காப்பு சட்டமும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இந்தச் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்கள் இலங்கையின் நன்மதிப்பை மேலும் சிதைத்தது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்
இவ்வாறான கரிசனைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது அரசியல் தன்முனைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன பேணப்படுவது அவசியமாகும்.
அதேபோன்று தேர்தல் பிரசாரத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வாக்குறுதியளிக்கப்பட்டமைக்கு அமைவாக புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் என வடக்கு, கிழக்கு மக்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
இந்த விடயத்தில் அநேகமான நடவடிக்கைகள் எட்டாவது நாடாளுமன்றத்திலேயே பூர்த்திசெய்யப்பட்டுவிட்டன. குறுகிய காலத்தில் அடையப்படக்கூடிய விடயங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன.
எனவே, தற்போது இதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான திட்டமும், தெளிவான காலவரையறையுமே அவசியமானதாக இருக்கின்றன. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்”
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |