தன்னை பற்றி வெளியான செய்தியை நிராகரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் 53 வீதத்தை தனது தனிப்பட்ட ஊழியர்கள் குழுவிற்கு செலவிட்டதாக வெளியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாகவும் அந்த நிதி தேசிய மட்டத்திலான மிகப் பெரிய வேலைத்திட்டங்களுக்காக செலவிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் என்னை விமர்சிக்க ஆரம்பித்துள்ளன
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நானும் எனக்கு முன்பு ஜனதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவும் எமது தனிப்பட்ட ஊழியர்கள் குழுவிற்கு செலவிட்ட நிதி தொடர்பான தகவல்களை கோரிய மாற்று கொள்கைக்கான கேந்திர நிலையத்தின் பிரதானி லயனல் குருகேவை மேற்கோள்காட்டி அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் என்னை விமர்சிக்க ஆரம்பித்துள்ளன.
குருகேவிற்கு தகவல்களை வழங்கியவர்கள் தவறான தகவல்களை அவருக்கு வழங்கியுள்ளனர்.
தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்களுக்காக நிதி செலவிடப்பட்டது
தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்களுக்காக எனக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்பட்டது. கிராம சக்தி வேலைத்திட்டம், சிறுநீரக நோய் தடுப்பு வேலைத்திட்டம், போதைப் பொருள் தடுப்பு வேலைத்திட்டம் போன்றவை அதில் அடங்கும்.
போதைப் பொருள் சம்பந்தமான குற்றங்களுடன் தொடர்புடைய சில குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்கும் ஆவணங்களிலும் நான் கையெழுத்திட்டேன்.
அந்த காலத்தில் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால், தற்போது போதைப் பொருள் பிரச்சினை பாரதூரமான நிலைமைக்கு சென்றிருக்காது.
அதேபோல் பிரதேச செயலாளர்களுக்கு ஆயிரம் மடிக்கணனிகளை வழங்கும் வேலைத்திட்டத்தையும் நான் நடைமுறைப்படுத்தினேன்.
இதனால், ஊடகங்களில் வெளியான செய்திகளை திருத்தி வெளியிடுமாறு மாத்திரம் கேட்டுக்கொள்கிறேன் என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் தனிப்பட்ட ஊழியர்களுக்காக செலவிட்ட நிதி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2010-2014 ஆம் ஆண்டு வரையான தனது பதவிக்காலத்தில் 638,107,941.84 இலட்சம் ரூபாவினை தனது 2578 தனிப்பட்ட ஊழியர்களின் பராமரிப்புக்காக செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
2015-2019 வரையான தனது பதவிக்காலத்தில், மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட ஊழியர்களின் பராமரிப்புக்காக 850,326,968.14 பொதுப் பணத்தை செலவிட்டுள்ளதாகவும், சிறிசேனவின் தனிப்பட்ட ஊழியர்களாக 1378 பேர் பணிபுரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.