கிரிக்கெட் விளையாட்டு அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது - திலங்க சுமதிபால
கிரிக்கெட் விளையாட்டு முற்று முழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ள இந்த துர்ப்பாக்கிய நிலைமை குறித்து பெரும் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிரிக்கெட் தொடர்பில் தற்பொழுது தேசிய திட்டமொன்று கிடையாது. அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. நான் பதவி வகித்த காலத்தில் தேசிய ரீதியிலான திட்டமொன்றை வகுத்து அதனை சரியான முறையில் அமுல்படுத்தியிருந்தோம்.
1995ஆம் ஆண்டு, 2003ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு ஆகிய காலப் பகுதிகளில் இவ்வாறு தேசிய திட்டங்களை வகுத்து அதனை வெற்றிகரமாக அமுல்படுத்தியிருந்தோம்.
பல்வேறு அமைச்சர்களினால் இடைக்கால குழுக்கள் உருவாக்கப்பட்டு இந்த தேசிய திட்டத்தை அமுல்படுத்த விடாது சீர்குலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போதைய தெரிவுக்குழுவின் தூர நோக்கற்ற நடவடிக்கைகளினால் கிரிக்கெட் துறை பாரியளவில் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
