பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கும் மனைவிக்கும் மேலும் 17 வருட சிறைத்தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு புதிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு, அரசுப் பரிசுகள் தொடர்பான மோசடி வழக்கில் மேலும் பல ஆண்டுகளுக்கான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு சவுதி அரேபிய அரசுப் பயணத்தின் போது, அந்த நாட்டின் இளவரசர் முகம்மது பின் சல்மான், புஷ்ரா பீபிக்கு வழங்கிய புல்காரி வைர நகைத் தொகுப்பு இந்த வழக்கின் மையமாக அமைந்துள்ளது.
குறைந்த விலை
பாகிஸ்தானின் விதிகளின்படி, வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் அரசுப் பரிசுகள் அனைத்தும் ‘தோஷ்கானா’ எனப்படும் அரசுக் களஞ்சியத்துக்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.

பின்னர், அவற்றை அரசு நிர்ணயிக்கும் மதிப்பில் மீண்டும் கொள்வனவு செய்துக் கொள்ள அனுமதி உள்ளது. ஆனால், இம்ரான் கான் அந்த நகைத் தொகுப்பின் மதிப்பை குறைவாக கணக்கிட்டு, குறைந்த விலையில் அவற்றை மீண்டும் கொள்வனவு செய்ததாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இந்த நிலையில், குற்றமான நம்பிக்கை மோசடிக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், குற்றச்செயல் நடத்தைக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் என மொத்தம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1.6 கோடி பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகள், அவர்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் சிறைத் தண்டனைகளுடன் ஒரே நேரத்தில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்குதல் என இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, இம்ரான் கான் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 2023 ஓகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதத்தில் தனியான ஊழல் வழக்கில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத் தவிர, 2023 மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை போராட்டங்கள் தொடர்பாக தீவிரவாத குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன. முன்னதாக, 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.