ஜே.வி.பியின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ஊதியத்தை வழங்குமாறு முன்னாள் எம்.பிக்கள் கோரிக்கை
ஜே;வி.பி. கட்சியின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தங்கள் ஊதியத்தை திரும்ப வழங்குமாறு அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஜே.வி.பி. கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் பிரேமசிறி மானகே குறித்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதுடன், அது தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவும் முன்வந்துள்ளார்.
கடந்த 1994ஆம் ஆண்டு தொடக்கம் ஜே;வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ஜே.வி.பி.கட்சியின் பொதுக் கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
பணம் வரவு
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்களையும் கட்சியின் சார்பில் பெற்றுக் கொண்டு அவற்றை விற்பனை செய்து அதில் கிடைத்த வருமானத்தையும் கட்சியின் கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருந்தனர்.
அக்காலப் பகுதியில் ஒவ்வொரு மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறைந்த பட்சம் தலா மூன்று கோடி அளவில் கட்சியின் பொதுக் கணக்கில் வரவு வைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறாக ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியின் விருப்பு வெறுப்பு குறித்த கரிசனை கொள்ளாமல் பலவந்தமாக கட்சியின் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டும் பிரேமசிறி மானகே, அவற்றை உரியவர்களுக்கு திருப்பிக் கையளிப்பதே தார்மீக செயற்பாடாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஓய்வூதியம் இரத்து
ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ள நிலையில் அது ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறும் செயற்பாடாகும் என்பதுடன், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாழ்க்கைக்கான வருமானமாக குறித்த ஓய்வூதியமே கைகொடுப்பதாகவும் , அதனை ரத்துச் செய்தால் அவர்கள் பெரும் இக்கட்டான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பிரேமசிறி மானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்வதுடன், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச நாடாளுமன்ற பேரவை, சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் என்பவற்றில் முறைப்பாடுகளை மேற்கொண்டு ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



