60 மில்லியன் ரூபாவிற்கு வாகன அனுமதிப்பத்திரத்தை விற்ற முன்னாள் எம்.பி!
கடந்த அரசாங்கத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஐந்து நாட்கள் மாத்திரம் சபையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது வாகன அனுமதிப்பத்திரத்தை 60 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது மக்கள் படும் இன்னல்கள் குறித்து பேச ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும், சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்னவும் இருந்த போது சுகாதாரத்துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஏன் பேசவில்லை எனவும் அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தொற்றுநோய் பரவும் பட்சத்தில் மக்களைப் பணயம் வைத்து வேலைநிறுத்தம் நடத்துவது நியாயமில்லை என்று கூறிய அமைச்சர், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான அலையை உருவாக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நேற்று ஒரு பெண் தொலைக்காட்சியில் கூறியதை பார்த்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.