கச்சத்தீவு விவகாரம்: இந்தியாவுடனான கலந்துரையாடலை எதிர்க்கும் முன்னாள் எம்.பி
கச்சத்தீவு பகுதியானது இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அது தொடர்பில் இந்தியாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தேவையில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் அண்மையில் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தது.
இந்நிலையில் கச்சத்தீவு தொடர்பில் இந்தியா, முறைப்படியான வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் அதுகுறித்து கலந்துரையாடத் தயாராக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சரத் வீரசேகர, மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பிரதான ஒரு அம்சமாக கச்சத்தீவு காணப்படுகிறது. இது இலங்கைக்கு சொந்தமானது. இவ்விடயத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது.
இந்தியாவின் ஒத்துழைப்பு
இந்தியாவின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை கிடையாது.
கச்சத்தீவு விவகாரத்தை இந்திய அரசாங்கம் அரசியல் பிரச்சாரத்துக்காகவே பயன்படுத்திக் கொள்கிறது.
இலங்கை இவ்விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |