நிலக்கரி கொள்வனவு விவகாரம்! சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை
நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நாளை (04) முன்னிலையாகுமாறு முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை சுமார் 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி
மகிந்த ராஜபக்ச மற்றும் நல்லாட்சி அரசாங்கங்களின் ஆட்சி காலங்களில் எரிசக்தி அமைச்சராக பதவி வகித்தபோது, நிலக்கரி கொள்வனவின் போது அமைச்சரவையின் அனுமதியின்றி செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக வழங்கப்பட்ட சாட்சியங்களுக்கு அமைய ஆணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான நீண்டகால நிலக்கரி கொள்வனவின்போது தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் தலைமையில் இந்த ஆணைக்குழு செயற்பட்டு வருகிறது.
குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இறுதி அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.