பகிரங்க மன்னிப்புக் கோரிய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி
அரச வாகனத்தை சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்திய குற்றத்திற்காக, உயர்நீதிமன்றம் விடுத்த தீர்ப்புக்கு அமைவாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, இன்று (24) சிங்கள அரச நாளிதழ் ஒன்றில் பகிரங்க மன்னிப்பு விளம்பரத்தைப் பிரசுரித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி இது தொடர்பில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், பௌசியை அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியத்திற்கு சுமார் 6.6 மில்லியன் ரூபாயைச் செலுத்துமாறும், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் பகிரங்க மன்னிப்பு விளம்பரம் வெளியிடுமாறும் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவு
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை, தனது சொந்தப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தியதன் மூலம், அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை பௌசி மீறிவிட்டார் என உயர்நீதிமன்றம் கண்டறிந்தது.

பௌசியின் இந்தச் செயலை "பொதுநம்பிக்கைக்குச் செய்யப்பட்ட துரோகம்" (textbook betrayal) என்றும் நீதிமன்றம் விபரித்துள்ளது.
இந்த நிலையில், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் கொண்ட அமர்வு, இலங்கை வர்த்தகச் சபை முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, இந்தத் தீர்ப்பை வழங்கியது.
அத்துடன், குறிப்பிட்ட வாகனத்தின் புகைப்படத்துடன், அரைப் பக்க அளவிலான மன்னிப்பு விளம்பரங்களை 'சிலுமின', 'சண்டே ஒப்சர்வர்' மற்றும் 'தினகரன்' ஆகிய அரச நாளிதழ்களில் பிரசுரிக்குமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டிருந்தது.
10 நாட்களுக்குள் முடிவு..! சிறையிலுள்ள பௌத்த தேரர்களின் காவியுடை விவகாரத்தில் அரசின் அதிரடி வர்த்தமானி