அமெரிக்காவில் முக்கிய விருது பெற்ற ஈராக்கிய முன்னாள் அமைச்சரின் அமெரிக்க விசா இரத்து
ஈராக்கின் முன்னாள் நிதி அமைச்சரான தாயிஃப் சாமி முகமது அல்-ஷகார்ஜியை அமெரிக்கக் கூட்டாட்சிப் புலனாய்வுப் பணியகம் (FBI) பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதைத் தொடர்ந்து, அவரது அமெரிக்க விசாவை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இரத்து செய்துள்ளது.
அவர் தற்போது அமெரிக்காவில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதிகாரிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய விருது..
ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் பாலின சமத்துவப் பணிகளுக்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (2022 இல்) அமெரிக்காவால் 'சர்வதேசத் தைரியமிக்க பெண்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒருவருக்கு, தற்போது விசா இரத்து செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கின் நிதியமைச்சராகப் பணியாற்றிய தாயிஃப் சாமி, நாட்டின் வரவு செலவுத் திட்ட ஊழல்களைத் தடுத்தமைக்காக 'இரும்புப் பெண்மணி' என அழைக்கப்பட்ட போதிலும், ஈராக்கிய நிதி அமைப்பின் மூலம் பயங்கரவாத நிதியுதவிகளுக்கு வழிவகுத்ததாக அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் தாயிஃப் சாமி, பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் ஆதாரமற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார்.