இந்தோனேசியாவின் முன்னாள் கல்வி அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க கோரிக்கை
இந்தோனேசியாவின் முன்னாள் கல்வி அமைச்சரும், பிரபல ரைடு-ஹெய்லிங் நிறுவனமான 'கோஜெக்' அமைப்பின் இணை நிறுவுனருமான நாடிம் மகாரிமுக்கு ஊழல் வழக்கில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பேரிடர் காலத்தின் போது பாடசாலைகளுக்காக கூகுள் குரோம்புக் மடிக்கணினிகள் மற்றும் மென்பொருட்களைக் கொள்முதல் செய்ததில் சுமார் 125.64 மில்லியன் டொலர் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, கூகுள் நிறுவனத்தின் மென்பொருளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் கொள்முதல் விதிமுறைகளை மாற்றியமைத்ததன் மூலம், இந்தோனேசியாவின் கல்விச் சூழலை அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அவர் முயன்றதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
சிறை தண்டனை கோரிக்கை
இணைய வசதி குறைவாக உள்ள இந்தோனேசியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கு இந்த மடிக்கணினிகள் பொருத்தமற்றவை என்று ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையிலும், கூகுள் பிரதிநிதிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தி இந்தக் கொள்முதலை அவர் முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் நாடிம் மகாரிம் தனிப்பட்ட முறையில் சுமார் 46.33 மில்லியன் டொலர் ஆதாயம் அடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் கோஜெக் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகி அமைச்சரான இவர், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
அண்மைய ஆண்டுகளில் ஒரு முன்னாள் அமைச்சருக்குக் கோரப்பட்டுள்ள மிகக் கடுமையான தண்டனைகளில் ஒன்றாக இது பார்க்கப்படும் நிலையில், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam