கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் விசாரணை
அம்பாறையில் கைத்துப்பாக்கி மற்றும் 143 துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை - வாவின்ன - பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17ஆம் திகதி அன்று மாலை கைது செய்யப்பட்ட நபர் பின்னர் இகினியாகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணை நடவடிக்கைகள்
அம்பாறை விசேட அதிரடிப் படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இகினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவின்ன பரகஹகலே பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி, 143 தோட்டாக்கள், இரண்டு ரவை மெகசீன்கள் மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் 51 வயது மதிக்கத்தக்க முன்னாள் ஓய்வுபெற்ற இராணுவ சிறப்புப் படை வீரர் என்பதுடன் அவரது வீட்டு காணியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த 9 எம்.எம் துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மீட்கப்பட்ட துப்பாக்கியின் இலக்கம் அழிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேக நபர் தொடர்பிலும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், குறித்த துப்பாக்கியை போர் நடைபெற்ற வேளை வட பகுதியில் கடமையில் இருந்து எடுத்து வந்தாரா அல்லது விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியா அல்லது இராணுவ களஞ்சியசாலையில் இருந்து பெறப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா என பல கோணங்களில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.