விவசாயிகள் உழவு செய்ய வன இலாகாவினர் மரங்களை நாட்டுகிறார்கள் - செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
நிலங்களை உழவு செய்யும் வரை வன இலாகாவினர் பொறுமையாக காத்திருந்து மேலதிக செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி தாம் மரங்களை நாட்டுகின்ற ஒரு செயற்பாட்டை செய்கின்றமை கண்டிக்கத்தக்க விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஊடகவியலாளர் வினவிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் மகிந்த அமரவீர வவுனியாவிற்கு கடந்த 23ம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொண்டு விவசாய அமைப்புக்களை அழைத்து கூறிய விடயம் “வன இலாகாக்குரிய நிலங்களிலும் நீங்கள் உளுந்தை சாகுபடி செய்யலாம் அதில் ஒரு தடையும் இருக்காது” என்பதே.
விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்து வன இலாகாவினர்
நிலங்களை உழவு செய்யும் வரை வன இலாகாவினர் பொறுமையாக காத்திருந்து இப்போது அதனை தடுத்து நிறுத்தி தாங்கள் மரங்களை நாட்டுகின்ற செயலை செய்து வருகின்றனர்.
இது உண்மையிலே கண்டிக்கத்தக்க ஒரு விடயம். நாடாளுமன்றத்திலே இது சம்பந்தமாக பதில் கூறுவோம்.
அரசாங்கம் இது ஒரு பொதுவான விடயமாக நிலங்களை விவசாயிகளுக்கு கொடுத்து உற்பத்தியிலே கூடுதலாக வருமானத்தை பெறுவதற்கான ஒரு வாய்ப்பினை மேற்கொள்வதாக தம்பட்டம் அடித்தார்கள்.
தற்போது இந்த விடயம் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செலவு செய்து, நிலங்களை உழுது தங்களுடைய உளுந்து செய்கையே மேற்கொள்கின்ற நிலையிலே வன இலாகவினர் அவர்களை தடுத்து நிறுத்தி நீதிமன்றம் செல்வதற்கான முறையையும் கையாளுகின்றார்கள்.
விவசாயிகளுக்கு நல்ல சமிக்ஞையை கொடுக்க வேண்டும்
அமைச்சரும், அரசாங்கமும் மௌனம் சாதித்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அரசாங்கம் இந்த விடயத்திலே உடனடியாக விவசாயிகளுக்கு கூறிய கருத்தின் அடிப்படையிலே இந்த திணைக்களங்களினுடைய தலையீட்டை நிறுத்தி விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்கின்ற உற்பத்தி செய்கைகளுக்கான வாய்ப்பினை உடனடியாக செய்ய வேண்டும் என்று நாங்கள் பேச இருக்கின்றோம்.
அமைச்சர் இந்த விடயத்தில் உடனடியாக கவனத்தில் எடுத்து விவசாயிகளுக்கு நல்ல சமிக்ஞையை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.
இல்லையெனில் நாடாளுமன்றத்திலே அவர் சம்பந்தமான கருத்துக்களை,
அரசாங்கம் கூறிய கருத்துக்களை நாங்கள் அம்பலப்படுத்த வேண்டி வரும் என மேலும் தெரிவித்துள்ளார்.




