வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகளுக்கு முக்கிய தகவல்
இஸ்ரேல் நாட்டில் தாதியர் வேலை வழங்குவதாக கூறி ஒருவரிடம் இருந்து 1,195,000.00 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட பெண் ஒருவர் உட்பட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் தாதியர் சேவை வேலை வழங்குவதாக வரக்காபொல பிரதேசத்தில் வசிக்கும் அரச தாதி ஒருவரிடம் இந்தப் பெண் பணம் பெற்றுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் உரிய வேலை வழங்கப்படாததால் இது தொடர்பில் பணியக விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டிற்கமைய, கைது செய்யப்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தென் கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வேலைக்காக பல்வேறு நபர்கள் பணம் செலுத்தியதாகவும், வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கப்படவில்லை என்றும் இந்த நாட்களில் பணியகத்திற்கு பாரிய அளவில் முறைப்பாடுகள் கிடைப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.
எனவே, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அல்லது நபருக்கு வெளிநாட்டு வேலைக்காக பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், அந்த அமைப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு சட்டப்பூர்வ நிறுவனமா என்பதையும், அதற்கான வேலை உத்தரவுகள் அந்த நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறியுமாறு பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.