ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள்: தகவல்களை வெளியிட மறுக்கும் அரசு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஊடகவியலாளர் ஒருவரால் ஜனாதிபதி செயலகத்திடம் தகவலறியும் சட்டத்தின் ஊடாக கோரிய போதே ஜனாதிபதி செயலகம் இந்த மறுப்பு அறிக்கையை அனுப்பியுள்ளது.
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்து, தற்போது நாடு வழமைக்கு திரும்பி வரும் சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பிரதிநிதிகள் குழுக்களுடன் பல்வேறு வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தகவலறியும் சட்டம்
பிரிட்டன், சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், கியூபா, அமெரிக்கா ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு, தனது பதவியேற்பின் பின்னரான காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட விஜயங்கள் அன்றி, அதிகாரபூர்வ விஜயங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட போதிலும், அந்த விஜயங்களில் அதிகளவிலான பிரதிநிதிகள் குழாம் பங்கேற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே, தகவலறியும் சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர் கே.திலிப் அமுதன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அனைத்து விஜயங்களுக்குமான மறுப்பு
ஜனாதிபதியின் ஒவ்வொரு நாட்டிற்குமான விஜயங்கள் தொடர்பிலான தகவல்களை, ஊடகவியலாளர் தனித்தனியாக கோரியுள்ளார். இவ்வாறு ஊடகவியலாளரின் கோரிக்கைக்கு, தனித்தனியாகவே ஜனாதிபதி செயலகம் மறுப்பு தகவலை அனுப்பி வைத்துள்ளது. ஜனாதிபதியின் லண்டன் விஜயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அனுப்பியுள்ள குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயம் தொடர்பில் நீங்கள் கோரியுள்ள தகவல்கள், பாதுகாப்பு உணர்வுப்பூர்வமான தகவல்களுடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், 2016ம் ஆண்டு 12ம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் 5 (1) (ஆ) (i) சரத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, அந்த தகவல்கள் வழங்கப்படுவதை தவிர்த்துக்கொள்வதாக பெயரிடப்பட்ட அதிகாரி தீர்மானித்துள்ளதாக உங்களுக்கு அறிய தருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளரும், தகவல் வழங்கும் அதிகாரியுமான எஸ்.கே.ஹேனாதீரவினால் இந்த பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அனைத்து விஜயங்களுக்குமான தகவல்கள் வழங்க மறுப்பதற்கான ஒரே பதிலாக மேலே குறிப்பிடப்பட்ட பதில் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.