இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு அவசர அறிவித்தல்
இலங்கையிலிருந்து வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கு அவசர அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
பணம், கடவுச்சீட்டு
அதன்படி எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர் குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அவசர அறிவுறுத்தலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ளது.
| அவதானம்..! வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி | 
இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ள செய்திக் குறிப்பில்,

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள் மற்றும் குறித்த நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையதளத்தில் காணலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போலி தகவல்
அத்துடன் ருமேனியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இதன்மூலம் மோசடியில் ஈடுபடும் குழுவினர் பணம் பறிப்பதற்கு முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, இது குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு முகவரின் மூலமாகத் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள தகவலில்,
நீங்கள் உள்ளூரில் முகவர் ஒருவரின் மூலம் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொண்டால் நீங்கள் பின்வரும் விடயங்களைச் சரி பார்க்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
- உங்கள் முகவர் பணியகத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் பெற்றவரா?
- உங்களுக்கு தொழில் கிடைக்கும் காலத்தில் அவரின் அனுமதிப் பத்திரம் செல்லுபடியானதா?
- உங்கள் முகவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தேவையான அங்கீகாரங்களைப் பெற்றுள்ளாரா?
- ஆட்சேர்ப்புக் காலம் வரை முதலாவது அனுமதி செல்லுபடியாகுமா?
இந்த காரணங்கள் பூர்த்தியாக இருப்பின் அந்த முகவர் கேட்டுக் கொள்வதற்கமைய நீங்கள் கடவுச்சீட்டையும் ஏனைய ஆவணங்களையும் ஒப்படைக்கலாம்.
கடவுச்சீட்டானது பதிவு செய்யப்படும் காலத்திலிருந்து குறைந்தபட்சம் இரண்டாண்டுகளுக்கு செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.
அதன் பிறகு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடும் பதிவுக் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். இது எவ்வாறாயினும் முகவரின் அனுமதிக் கட்டணத்துக்குள் சேர்க்கப்படாது.
நீங்கள் ஒரு மத்திய கிழக்கு நாட்டுக்குப் புலம்பெயர்வதாயின்,
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகின்ற ஒரு பதிவுக்கட்டணத்தை மட்டும் நீங்கள் செலுத்த வேண்டும்.
தேவை ஏற்படின் நீங்கள் பயிற்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு உடன்படிக்கையின் பூர்த்தி செய்யப்பட்ட பிரதியொன்று உங்களிடம் இருக்க வேண்டும்.
உங்கள் முகவர் பணியகத்தின் தேவையான அனுமதியைப் பெற்ளுக் கொள்வதோடு பின்வரும் ஆவணங்களை உங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
- இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அங்கீகார முத்திரையுடன் கூடிய கடவுச்சீட்டு
- தகுதியான விசா
- விமான பயணச்சீட்டு
- தொழில் உடன்படிக்கை
- வங்கிப் பற்றுச்சீட்டின் வாடிக்கையாளர் பிரதி
- காப்புறுதிச்சான்றிதழ்
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        