கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்! இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
மலேசியாவில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி சதி நடவடிக்கையில் ஈடுபடும் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தொழில் தேடி வெளிநாட்டிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், இவ்வாறு வெளிநாட்டு தொழில்வாய்ப்பை தேடிச் செல்பவர்களை குறிவைத்து பாரிய மோசடி நடவடிக்கைகள் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மலேசிய தொழில்வாய்ப்பும் மோசடியும்
இந்த நிலையில், மலேசியாவில் தொழில்வாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்து விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்கும் கடத்தல்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
மலேசியாவில் இருந்து இந்த நாட்டிற்கு கிடைக்கும் 10,000 வேலை வாய்ப்புகள் தொடர்பாக பல்வேறு தொடர்புகளை முன்னிலைப்படுத்தி விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களை சேகரிக்கும் பணியில் கடத்தல்காரர்கள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
மலேசியாவில் பணிக்கு அனுப்பப்படும் இலங்கையர்களிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.