தமிழ்த் தலைவர்களை கொலை செய்த விடுதலைப்புலிகளையே படையினர் அழித்தனர்! - டிலான் பெரேரா
யுத்தம் இருந்த காலத்தில் மக்களுக்கு எதிராக அல்ல, விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே அரசாங்கம் போரிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், நேற்று நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஹர்ஷடி சில்வா உள்ளிட்டவர்கள் மறைமுகமாக இனப்படுகொலை என்கிற பதத்திற்கு விளக்கம் கொடுத்தார்கள்.
“எமது நாட்டில் மஹிந்த ராஜபக்ச அரசாங்க காலத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இப்போதும் படுகொலை செய்யப்படுகின்றார்கள்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார்.
இன்று எப்படி இனப்படுகொலை இடம்பெறுகிறது. வேண்டுமென்றே மற்றைய இனத்தவர்கள் கொலை செய்யப்படுவதே இனப்படுகொலை. யுத்தம் இருந்த காலத்தில் மக்களுக்கு எதிராக அல்ல, விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே அரசாங்கம் போரிட்டது. நீலம் திருச்செல்வம், பத்மநாபன், சபாரத்னம், உமா மகேஸ்வரன், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்களை விடுதலைப் புலிகளே கொலை செய்தனர்.
அப்படியான விடுதலைப் புலிகள் இயக்கத்தையே படையினர் அழித்தார்கள். அதை எப்படி இனப்படுகொலையாக சித்தரிக்க முடியும்? இனப்படுகொலையை தடுத்தோம். ஹர்ஷடி சில்வா கேள்வி கேட்கின்ற போது இன்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இனப்படுகொலை செய்வதாக தெரிவிக்கின்றார்.
இனப்படுகொலை என்பதை அவர்களுக்கு ஏற்றவிதத்தில் திரிபுபடுத்தியே ஜெனிவாவிலும் போராடுகின்றார்கள். சரத் வீரசேகரவுக்கு அமைச்சுப் பதவியை வழங்கியதும் ஜெனிவாவில் பிரச்சினையாகியுள்ளது.
அவர் பொதுமக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியவர். கடந்த அரசாங்கத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் அமைச்சுப் பதவி கொடுத்தார்கள்.
அவர் சிறந்த இராணுவ அதிகாரி. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தபோது பொன்சேகாவும் தொடர்புபட்டவரா? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்களே அன்று சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக நியமிக்க முயற்சித்தார்கள்.
அன்று வாயிலேயா பேசினார்கள் என கேட்கின்றோம். படையினரால் இனப்படுகொலை ஏற்படவில்லை என்பதை அன்று ஏற்றுக்கொண்டார்கள். இனப்படுகொலை என்பதன் பொருளை தங்களுக்கு ஏற்ற வகையில் திரிபுபடுத்த முடியாது.
எமது நாட்டில் உள்ளக விசாரணையை நடத்தி குற்றவாளியாக இனங்காணப்படுபவர்களுக்கு தண்டனை கொடுக்க எங்களுக்கும் விருப்பம். பரணகம அறிக்கையில் உள்ளவற்றை அமுல்படுத்த நடவடிக்கை அன்று எடுக்கப்பட்டது.
எனினும் அவர்களுக்கு அவசியமான காலத்தில் இனப்படுகொலை என்றும், தேவையில்லாத காலத்தில் இனப்படுகொலை இல்லை என்றும் கூறும் அளவுக்கு எமது நாடு இல்லை. உள்ளக ரீதியிலான பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.




