ஒரு மணி நேர பேச்சு! - புடினுக்கு, பைடன் கடும் எச்சரிக்கை
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை தெரிவித்தார். படைகளை உடனடியாக திரும்ப பெறுமாறும் புடினுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அதிக மனித உயிர் இழப்புகள் ஏற்படும் என்று பைடன் குறிப்பிட்டார்.
ரஷ்யா உக்ரைனை தாக்கினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உறுதியான பதிலடி கொடுக்கும், இதனால் ரஷ்யா மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் அப்போது பைடன் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
எனினும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் புடின் நிலைப்பாற்றில் மாற்றம் ஏதுவும் தெரியவில்லை என அமெரிக்க மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையை தொடர ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரம் அடையும் உக்ரைன் - ரஷ்யா பதற்றம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதை தடுக்க ஐக்கிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது.
சோவியத் யூனியனில் அங்கம் வைத்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும். ஆனால், எல்லை பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை அளித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை சிறிது சிறிதாக குவித்து வருகிறது.
இதுதொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்ட போதிலும், ரஷ்யா படைக்குவிப்பை நிறுத்தவில்லை. போர் நடத்துவதற்கு தேவையான சுமார் 70 சதவீத பணிகளை ரஷ்யா செய்து முடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் சுமார் ஒரு இலட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.