சுகாதாரத்துறையினரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறு வலியுறுத்தல்
தற்போதைய கோவிட் வைரஸ் பரவல் நிலையில் திருகோணமலை மாவட்ட மக்கள் சுகாதாரத்துறையினரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கட்டாயம் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள கோரிக்கை விடுத்துள்ளார்.
முகக் கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணல், ஒன்றுகூடல்களைத் தவிர்த்தல், அநாவசியப் பயணங்களை தவிர்த்தல் ஆகிய விடயங்களில் கூடிய கவனம் செலுத்துமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தின் செயற்பாடுகளை எவ்வித பாதகமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது.
ஒவ்வொரு கருமங்களையும் ஆற்றுகின்ற சந்தர்ப்பத்தில் மக்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படலானது வைரஸைக் கட்டுப்படுத்த ஏதுவாக அமையும்.
மக்கள் அனைவரும் இச்சவாலான காலப்பகுதியை வைரஸை ஒழிக்கும் வகையில் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்வது காலத்தின் தேவையாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.