இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் வானூர்தி சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம்! - பிரசன்ன ரணதுங்க
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் வானூர்தி சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இந்த சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சேவையின்போது உரிய சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க இந்திய மற்றும் இலங்கை சுகாதார அமைச்சுகள் உடன்பட்டுள்ளன.
இதன்கீழ் இலங்கையின் கொரோனா தடுப்பு செயலக குழு விரைவில் இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை கடந்த ஜனவரி 21ஆம் திகதியன்று எல்லைகளைத் திறந்த பின்னர் யுக்ரெய்ன், பெலாரஸ், சீனா ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்றும் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.




