Flydubai விமான விபத்தில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு துபாய் அரசு வழங்கிய அங்கீகாரம்
கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி விமானத்தின் விமானி அறைக்குள் இடம்பெற்ற தாக்குதலின் போது துணிச்சலுடன் செயற்பட்ட இந்திய விமானி கப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் flydubai விமானப் பணியாளர்களை ஐக்கிய அரபு இராச்சியம் கௌரவித்துள்ளது.
இந்த நிகழ்வு இன்று(28.10.2026) இடம்பெற்றுள்ளது.
flydubai விமானத்தில், இந்திய விமானி கப்டன் ஸ்மித் மச்சார் பலத்த காயமடைந்த போதிலும், பல போராட்டங்களுக்கு மத்தியில், விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
அவரின் துணிச்சலான நடவடிக்கைகள் பெரும் அனர்த்தம் ஏற்படக்கூடிய நிலையைத் தவிர்க்க உதவியதாக உலக நாடுகளால் கொண்டாடப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விமானப் பணியாளர்களின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அவருக்கு முதலாம் தர சயீத் II விருதை வழங்கியுள்ளார்.
துபாய் பட்டத்து இளவரசர் வழங்கிய கௌரவிப்பு
இந்தக் கௌரவங்களை துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வழங்கியுள்ளார்.
கப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பல்வேறு நாடுகளும் பாராட்டியுள்ள நிலையில், இஸ்ரேலும் அவருக்கு சிவிலியன் துணிச்சல் விருதொன்றை வழங்குவதாக அறிவித்துள்ளது.

காயங்களிலிருந்து அவர் குணமடைந்த பின்னர் இந்த விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது, ஆபத்தான சூழ்நிலையில் விமானியும் பணியாளர்களும் வெளிப்படுத்திய துணிச்சல், விரைவான முடிவெடுக்கும் திறன் மற்றும் தலையீடு ஆகியவை பெரும் அனர்த்தத்தைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam