திருகோணமலை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியது
திருகோணமலை(Trincomalee) மாவட்டத்தில் தற்போது, வெள்ளம் வடிந்து வருவதால் போக்குவரத்து சேவைகள் உட்பட, அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் கன மழையினால், ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த பத்து தினங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக, மழை இல்லாததன் காரணமாக மாவட்டமெங்கும் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு படிப்படியாக வடிந்து வருகின்றது.
இயல்பு வாழ்க்கை
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, வெருகல் பகுதியில் தடைபட்டிருந்த, பிரதான போக்குவரத்து மார்க்கம் தற்போது, வழமைக்கு திரும்பியுள்ளது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை(Ampara) மாவட்டங்களில் இருந்து திருகோணமலை நகருக்கான போக்குவரத்து சேவைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, தொழிலுக்கு செல்ல முடியாது, தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் இருந்த கடற்றொழிலாளர்கள், இன்று கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையை காண முடிந்தது.
வியாபார நடவடிக்கைகள்
அதேபோன்று வியாபார நடவடிக்கைகளும் இன்று வழமைக்கு திரும்பியுள்ளன.
இதேவேளை, வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 3372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்ததோடு, 15000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்து இருப்பதாகவும், வெள்ளத்தினால் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |