அரசாங்கம் ஒதுக்கியுள்ள இழப்பீட்டுத் தொகை : கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லையென கமநல அமைப்புகள் (Department of Agrarian Development) தெரிவித்துள்ளன.
அதிகளவு பாதிப்பைச் சந்தித்துள்ள 6 வகையான பயிர்கள் தொடர்பில் குறித்த நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக சுமார் 338,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் போன்ற பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபாவுக்கு மேற்படாத தொகை இழப்பீடாக வழங்கப்படும் என விவசாயத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இழப்பீட்டுத் தொகை
இந்நிலையிலேயே, குறித்த இழப்பீட்டுத் தொகை தமக்கு போதுமானதாக இல்லை என கமநல அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், காலநிலை அனர்த்தங்களால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அரசாங்கம் உரிய முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் அந்த அமைப்பினர் கோரியுள்ளனர்.
இதேவேளை, சீரற்ற காலநிலையினால் தங்களது பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதோடு அதற்காக அரசாங்கம் உரிய வகையில் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |