திருகோணமலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய விவசாய நிலங்கள் (Photos)
திருகோணமலை மாவட்டத்தில் மாவிலாறு திறந்துவிடப்பட்டமையால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மாவடிச்சேனை, சேனையூர், வட்டவன், வாழைத்தோட்டம் கல்லடி, முத்துச்சேனை உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கனமழை பெய்து வருவதினால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதினாலும், மாவிலாறு திறந்து விடப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலை தகவல்
இந்நிலையில், வெருகல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 168 குடும்பங்களைச் சேர்ந்த 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 120 குடும்பங்களைச் சேர்ந்த 341 பேர் வெருகலம்பதி இந்து மகாவித்தியாலயத்திலுள்ள நலன் புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிண்ணியா - உப்பாறு வீதி தடைபட்டுள்ளதன் காரணமாக 139 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடற்படையினரின் உதவியுடன் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நீரில் மூழ்கிய விவசாய நிலங்கள்
மேலும் சேறுவில - ஸ்ரீ மங்களபுர பகுதியில் பட்டு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
அத்துடன் வெருகல் பிரதேசத்திலுள்ள விவசாய நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக வேலாயுத விவசாய சம்மேளனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்தில் இருப்போருக்கு சுகாதார வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், வெருகல் பிரதேச செயலகம், பாதுகாப்புப் படையினர் மக்களுக்கான உதவி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
