பங்களாதேஷில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 44 பேர் பலி - 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் தவிப்பு!
பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
சட்டோகிராம், காக்ஸ் பஜார், பண்டர்பன் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2.6 இலட்சம் குடும்பங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
தீவிர இயற்கை பேரிடர்கள்
போக்குவரத்து துண்டிப்பு, மின்சாரமின்மை போன்ற காரணங்களால் மீட்புப் பணிகள் சவாலாக மாறியுள்ள சூழலில், இராணுவம் மற்றும் கடற்படையினர் படகுகள் மூலம் மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற தீவிர இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.