வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்
தற்போது எந்தப் பகுதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பெய்த மழைவீழ்ச்சி குறைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச மழைவீழ்ச்சி
இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார இன்று (11.08.2026) முற்பகல் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல்நிலைப் படுகை பகுதிகளிலேயே பதிவாகியுள்ளது.
அங்கு பதிவான மழைவீழ்ச்சி சுமார் 20 மில்லிமீற்றர் அளவை எட்டியுள்ளது.

ஆற்று நீர்மட்டம்
நேற்றைய தினம் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும் மழை பெய்த போதிலும், அப்பகுதிகளில் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.
மழைவீழ்ச்சி இவ்வாறு குறைந்துள்ளதன் காரணமாக நாட்டில் உள்ள எந்தவொரு ஆற்றின் நீர்மட்டமும் விரைவாக உயரவில்லை என்பதுடன், வெள்ள அபாய நிலையும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.