பிரான்ஸ்: பாரிஸ் அருகே துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி -4 பேர் காயம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு மேற்கே அமைந்துள்ள ட்ராப்ஸ் (Trappes) நகரில் இன்று(23) வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 வயது சிறுமி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
சந்தேகநபர் ஒருவர், தனது காரில் பயணித்தவாறே வீதிகளில் சென்ற பொதுமக்கள், சுகாதார மையம் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஆகியவற்றை இலக்கு வைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
சம்பவத்தையடுத்து அருகில் உள்ள குவான்னியர் (Coignières) பகுதியில் வைத்து 39 வயதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் காலத்து பழமையான அரை-தானியங்கி (semi-automatic) ஆயுதத்தைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி அலுவலகம் (PNAT) இந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயலாகக் கருதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும், இனவெறி அல்லது சதித்திட்டம் ஏதேனும் பின்னணியாக உள்ளதா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.