மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் குறித்து கலந்துரையாடல்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இன்றையதினம்(29) அவர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த நிலைமைகள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருடன் ஆளுநர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
நிவாரணப்பணிகள்
அத்தோடு, மாவட்டத்தின் பட்டிப்பளை, வெல்லாவெளி, வவுண தீவு, போரதீவுப்பற்று, கிரான், சித்தாண்டி, வாகரை என சகல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களுக்கான போக்குவரத்து, தற்காலிக படகு சேவை, சுகாதாரம், நீர் விநியோகம், அத்தியாவசிய தேவைகள் எவ்வாறு கிடைக்கின்றன, மற்றும் அமைக்கப்பட்டுள்ள 56 இடைத்தங்கல் முகாம்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய நிவாரணப்பணிகள் மற்றும் வெள்ளநீர் வழிந்தோடும் பகுதிகளில் முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
காத்தான்குடிப் பிரதேசத்தில் வெள்ள நீரை விடவும் அதிகமாக வாவி நீர் ஊருக்குள் புகுந்ததனால், அதனை அண்டிய பகுதியில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன.
இதனால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நிவாரண உதவிகள் தொடர்பாக இதன் போது ஆளுநரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெளிவுபடுத்தினார்.
சேதவிபரங்கள்
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஆளுநர் 500 உலர் உணவு பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தற்போது இயல்பு நிலையேற்பட்டுள்ளதாகவும் நிலைமை வழமைக்கு திரும்பிய பின்னர் சேத விபரங்கள் மதிப்பிடப்பட்டு நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது கருத்து தெரிவித்தார்.
இதேவேளை, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ச்சியான நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், உட்பட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா மற்றும் வலையிரவு பாலத்தின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விஜயம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |